மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு தான் சத்தியம் செய்துள்ளதாகவும், அதை நிறைவேற்ற பட்னாவிஸோ, அமித் ஷாவோ தேவையில்லை என்றும் பாஜகவை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த பட்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், சிவசேனாவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேசவே நேரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “பட்னாவிஸ் பேச்சை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய நிலை எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதன்முறையாக குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்கிற எனது தந்தையின் வழியில் தான் நான் நிற்கிறேன். நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என்று எனது தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிசோ தேவை இல்லை.முதல்வர் பதவி குறித்து அமித்ஷாவிடம் தெளிவாக கூறிவிட்டோம். நல்ல நண்பர் என்பதால் பட்னாவிசை ஆதரித்தோம். சிவசேனா ஒன்றும் பொய்யர்களின் கட்சி இல்லை. எங்களுக்கு பாஜக ஒன்றும் எதிரி இல்லை. ஆனால் அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாஜக அதிகாரத்திற்காக அலைகிறது. நாங்கள் ஹிந்து கட்சியா, இல்லையா என்பதை ஆர்.எஸ்.எஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
முதல்வர் பதவி குறித்து பொய் சொன்னதை, பாஜக ஒப்புக்கொள்ள வேண்டும்.அதிகார பகிர்வு குறித்து தெளிவுபடுத்தாத வரை பாஜக உடன் பேச மாட்டோம். ஆட்சி அமைக்க உரிமை உள்ளது என்றால், அக்கட்சி உரிமை கோரட்டும். மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், இங்கு நிலையான ஆட்சி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரை நம்ப மஹாராஷ்டிர மக்கள் தயாராக இல்லை. இப்போது தான் தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.