டில்லி
தமது சகோதரர் சொத்தை பறிமுதல் செய்த பாஜக அரசு தனது கட்சி தலைவ்ர்க்ள் சொத்து குறித்து விசாரிக்க வேண்டும் என மாயாவதி கூறி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார். இவருக்கு பினாமி பெயரில் நொய்டாவில் சுமார் ரூ. 400 கோடி மதிப்புள்ள 28,328 சதுர மீட்டர் பரப்புள்ள மனை ஒன்று இருந்தது. இதன் உரிமையாளர்கள் ஆனந்த் குமார் மற்றும் அவர் மனைவி விசிதர் லதா ஆகியோர் என கண்டறிந்த வருமான வரித்துறை அந்த மனையை பறிமுதல் செய்துள்ளது. மேலும் இதற்கான வருமான விவரம் குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இது பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயாவதி, ”மத்தியில் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளின் மீது பழி வாங்கும் நோக்குடன் நடந்துக் கொள்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் ரூ. 2000 கோடிக்கு மேல் செலவு செய்து வாக்குகளை பாஜக விலைக்கு வாங்கி. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டது. ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
எனவே எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. அவ்வகையில் எனது சகோதரர் மீது பொய்க் குற்றம் சாட்டி உள்ளது. என் சகோதர சகோதரிகளை துன்புறுத்துவதால் நாங்கள் பாஜகவுக்கு அடி பணிய மாட்டோம். எங்கள் மீது குற்றம் சாட்டும் பாஜக தனது கட்சி தலைவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க வேண்டும். அவர்கள் பாஜகவில் இணைந்த போது இருந்த சொத்துக்கள் மற்றும் தற்போது உள்ள சொத்துக்கள் குறித்து கண்க்கெடுத்தால் உண்மை உலகுக்கு தெரியும்” என கூறி உள்ளார்.