கொல்கத்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்குத் தோல்வி ஏற்படுத்த திருணாமுல்  காங்கிரஸார் கட்சிக்குள் நுழைந்ததாக மூத்த தலைவர் ததகதா ராய் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இக்கட்சியை எதிர்த்து பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் களம் இறங்கியும் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.  வெறும் 77 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மேகாலயா மற்றும் திரிபுரா ஆளுநருமான ததகதா ராய் இந்த தோல்வி குறித்து, “மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது துரதிருஷ்டவசமானது.,   முன்பு 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த நாங்கள் இப்போது 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.  இது ஒரு நல்ல முன்னேற்றம் தான்.   ஆனால் இது மட்டுமே வெற்றியா?

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திருணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு சிலர் பாஜகவுக்குத் தோல்வி ஏற்படுத்தும் நோக்கத்தில் தேவை இன்றி பாஜகவில் இணைந்தனர்.   இவர்களுக்குத் தேர்தல் வாய்ப்பு அளித்து எக்கச்சக்கமான பணம் செலவு செய்து பிரசாரம் செய்தும் நாம் தோல்வி அடைந்தோம்.   இவர்களால் கட்சியின் உண்மையான தொண்டர்கள் பலருக்கு தேர்தல் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

டில்லி தலைமைக்கு மேற்கு வங்க கலாச்சாரம் மற்றும் வழக்கங்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.    எனவே பல நடிகர்களாக இருந்து அரசியல்வாதி ஆனவர்களுக்குத் தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   இவர்கள் கலை உலகில் அறிவாளிகளாக இருந்தாலும் அரசியல் உலகில் முட்டாள்கள் மட்டுமே ஆவார்கள்.   அது மட்டுமின்றி பெண்கள் முன்னேற்றம் எனக் கூறி ஒரு சில அரசியல் ஞானம் அற்ற பெண்களுக்கு வாய்ப்பளித்தது மிகவும் தவறாகும்.

இவ்வாறு தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு அளித்தது மிகப் பெரிய தவறான செய்கையாகும்.   திருணாமுல் காங்கிரஸார் தாக்குதல் நடத்தும் போது அதில் பாஜகவின் உண்மையான தொண்டர்கள் தான் பாதிக்கப்பட்டனர்.  அவர்களைக் கட்சித் தலைவர்கள் சிறிதும் மதிக்கவில்லை.  இவை யாவும் பாஜகவின் தோல்விக்குக் காரணமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.