டில்லி
கடந்த ஆண்டு பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடை அதாவது மற்ற கட்சிகளைப் போல் மும்மடங்கு கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி ரூ.20000க்கு மேல் நன்கொடை பெறும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு தங்கள் நன்கொடை விவரங்களை ஒவ்வொரு வருடமும் அளிக்க வேண்டும். தனிநபர், நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்து கிடைக்கும் நன்கொடை விவரங்களையும் அளிக்க வேண்டும்.
தேர்தல் பத்திர வருமானம் இதில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வகையில் அனைத்துக் கட்சிகளும் அளித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதில் அதிகபட்சமாக ரூ.743 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. மற்ற ஆறு தேசிய கட்சிகள் இணைந்து பெற்றுள்ள நன்கொடைகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். மற்ற கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.147 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இது பாஜகவின் வருமானத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.
பாஜகவுக்குக் கிடைத்த நன்கொடைகளில் அதிகபட்சமாக முற்போக்கு தேர்தல் நிதி நிறுவனம் (பிராக்ரசிவ் எலக்டோரல் டிரஸ்ட் ) ரூ, 357 கோடி வழங்கி உள்ளது. இது பாஜகவின் மொத்த நன்கொடையில் கிட்டத்தட்டப் பாதி ஆகும். கடந்த 16 வருடங்களில் பாஜக பெற்றுள்ள நன்கொடைகளில் அதிகபட்சமான நன்கொடையான ரூ.743 கோடி சென்ற வருடம் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த 16 வருடங்களில் அதிக நன்கொடையான ரூ.147 கோடி சென்ற வருடம் கிடைத்துள்ளது. சென்ற வருடத்துக்கு முன் வருடம் பாஜகவுக்குக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நன்கொடையைப் போல் பாஜக 16 மடங்கு பெற்றிருந்தது. ஆனால் சென்ற வருடம் இந்த வித்தியாசம் குறைந்துள்ளது.
கட்சிகளின் வருமானத்தில் நன்கொடை என்பது மிகச் சிறிய தொகை ஆகும். உதாரணமாக 2017-18 ஆம் வருடம் பாஜகவுக்கு ரூ.437 கோடியும் காங்கிரஸுக்கு ரூ.27 கோடியும் நன்கொடையாக கிடைத்தன. ஆனால் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.1027 கோடியாகவும் காங்கிரஸின் அண்டு வருமானம் ரூ.199 கோடியாகவும் இருந்தன. மற்ற தேசியக் கட்சிகளில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இன்னும் வரவு செலவு கணக்கை அளிக்கவில்லை.