இந்தூர்: குஜராத் மாநிலத்திலிருந்து அவசர தேவைக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த டேங்கர் லாரியை, தேவையின்றி நிறுத்திவைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர் மத்தியப் பிரதேச பாஜக பிரமுகர்கள்.
குஜராத் ஜாம் நகரிலிருந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு, 30 டன்கள் ஆக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு, ஒரு டேங்கர் லாரி, அங்கிருந்து 700 கி.மீ. தொலைவிலுள்ள இந்தூருக்கு விரைந்துள்ளது.
அவசர தேவை கருதி, லாரி ஓட்டுநர், வெறும் 3 மணிநேரம் மட்டுமே இடையில் தூங்கியதுடன், ஒரேயொரு முறை மட்டுமே உணவுக்காக இடையில் நிறுத்தியுள்ளார். ஆனால், அந்த டாங்கர், இந்தூரில் நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது.
தேவையான இடத்தில், ஆக்ஸிஜனை வழங்கிவிடலாம் என்று ஓட்டுநர் நினைத்த நிலையில், அந்த லாரி, பாஜக பிரமுகர்களால் இரண்டு முறை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் அம்மாநில பாஜக அமைச்சர் ஒருவரும் அடக்கம்.
மீடியா துறையினர் வரவழைக்கப்பட்டு, பாஜகவினர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, உரையாற்றியும் இருக்கின்றனர். மேலும், அந்த டாங்கருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியில், நிலைமையை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு, டாங்கரை உரிய இடத்திற்கு விரைவாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.