ராஞ்சி: 5 மாதத்தில் முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட  ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர்  நாளை பாஜகவில் இணைய உள்ளார். இதுகுறித்து கூறிய  சம்பாய் சோரன்  ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பா.ஜ.க.வில் இணைகிறேன் என்றும், பழங்குடியினருக்கான ஒரே கட்சி பாஜக என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல் மந்திரியாக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் ஜாமின் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல் மந்திரி பதவியில் இருந்து விலக ஹேம்ந் சோரானால் கட்டாயப்படுத்தப்பட்டார். இதனால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து கட்சி தலைமைமீது அதிருப்தியுடன் இருந்து வந்தார். அதனால், அவர் பாஜகவில் சேருவார்  அல்லது தனிக்கட்சி தொடங்குவார் என தகவல்கள் பரவின.

இந்த பரபரப்புக்கு மத்தியில் கடந்த வாரம்,   சம்பாய் சோரன்  டெல்லி வந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். பின்னர் பிரதமர் மோடியையும் சந்தித்தாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பாய் சோரன்  பாஜகவில் இணைவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்டு 30ந்தேதி ) ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சம்பாய் சோரன் , பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. பழங்குடியினரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் தீவிரமான கட்சியாக இருப்பது  “பாஜக இது மட்டுமே” என்பதால் தான் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளேன்.

மேலும் கூறுகையில், தனது வலியை வெளிப்படுத்தும் மேடை தன்னிடம் இல்லை என்றும், உடல்நலக் காரணங்களால் மூத்த ஜேஎம்எம் தலைவர்களை அணுக முடியவில்லை என்றவர்,  நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டு விட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன் என தெரிவித்தார்.