பாட்னா
பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் நாக்கை அறுப்போருக்கு ரூ.11 லட்சம் பரிசு என அம்மாநில பாஜக நிர்வாகி கஜேந்திர ஜா அறிவித்ததையொட்டி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நிறுவனத் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி, சமீபத்தில் நடந்த தலித் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் பிராமண சமூகத்தினரை இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, உலக ஹிந்து மஹா சபா பொதுச்செயலரும் பீகார் மாநில பாஜக செயற்குழு உறுப்பினருமான கஜேந்திரா ஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி மீண்டும் மீண்டும் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி வருகிறார். இனியும் அவரது பேச்சை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஜிதன் ராம் மஞ்சிக்குக் கண்ணியமும் இல்லை, இந்து மதத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. மஞ்சியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். மேலும், அவரது வாழ்நாள் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான், “யாருக்கு மாஞ்சியின் நாக்கை அறுக்கத் தைரியம் இருக்கிறது?. பாஜக தலைமை அதன் தலைவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். மஞ்சி தன் பேச்சுக்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார்,” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் கிடைத்துள்ள செய்தியின்படி பாஜகவில் இருந்து கஜேந்திரா ஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.