மகாராஷ்டிர மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.சி.யாக இருப்பவர் சக்திகாந்த் ஷிண்டே.
அந்த மாநிலத்தின் மேற்கு பகுதியான சதாராவில் செல்வாக்கு மிகுந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அங்குள்ள கோர்கான் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ,அவரை பா.ஜ.க. தலைவர்கள் சிலர் அணுகி உள்ளனர்.
“தேர்தலில் வெற்றி பெற்ற பின், எங்கள் கட்சிக்கு வந்தால் 100 கோடி ரூபாய் தருகிறோம்” என பா.ஜக. வினர், அப்போது, தன்னிடம் பேரம் பேசியதாக சக்திகாந்த் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சரத்பவாருக்கு நெருக்கமான எம்.எல்.சி. பா.ஜ.க. மீது வைத்துள்ள இந்த புகார் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் தெரிவித்த புகார் குறித்து சக்திகாந்த், நேற்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் “கடந்த தேர்தலில் நான் கோர்கான் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நின்றபோது பா.ஜ.க. தலைவர்கள் என்னை சந்தித்தது உண்மை. தேர்தலில் என்னை ஜெயிக்க வைக்க 100 கோடி ரூபாய் செலவளிப்பதாக ஆசை காட்டிய பா.ஜ.க.வினர், ‘தேர்தலில் ஜெயித்த பின் பா.ஜ.க.வில் சேர்ந்து விட வேண்டும்’ என கூறினர். நான் அவர்கள் பேரத்தை ஏற்க மறுத்து விட்டேன்” என சரத்பவார் கட்சி எம்.எல்.சி. தெளிவு படுத்தி உள்ளார்.
– பா. பாரதி