டில்லி

பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆவார்.  இவர் கடந்த ஓராண்டாக பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  குறிப்பாக வேளாண் சட்டம் அமலாவதில் இவர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

பிறகு இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த போது இந்த முடிவை முன்பே எடுத்து இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்திருந்தால் இவ்வளவு பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.  இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.   ஆனால் அதைப் பொருட்படுத்தாத வருண் காந்தி லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற மத்திய அமைச்சரையும் கடுமையாக சாடினார்,

அவர் அப்போது லக்கிம்பூரில் எடுக்கப்பட்ட வீடியோ மிகவும் தெளிவாக உள்ளது.   போராட்டம் செய்வோரைக் கொல்வது மூலம் அவர்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது.   இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்களை உத்தரப்பிரதேச அரசு நீதிக்கு முன் நிறுத்தித் தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டும்” எனக் கூறியது பாஜகவுக்கு மேலும் அதிருப்தியை அளித்தது.

இந்நிலையில் வருண் காந்தி தனது டிவிட்டரில்,

“தற்போதைய பாஜக அரசில் பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையாவின் 9000 கோடி, நிரவ் மோடியின் ரிஷி அகர்வாலின் 23000 கோடி ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.   ஆனால் அவர்கள் ஆனந்தமாக உள்ளனர்.

நாட்டில் இப்போது கடன் சுமையால் தினசரி சுமார் 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  ஆனால் பண முதலைகளின் வாழ்வு உச்சநிலை மகிழ்ச்சியில் உள்ளது.  இத்தகையை ஊழல்களுக்கு எதிராக ஒரு வலுவான அரசு வந்து வலுவான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது”

எனப் பதிந்து பாஜகவை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறார்.