டில்லி

மாசல பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை. அவரது மர்ம மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டில்லியில் தற்போது  நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  இதையொட்டி அனைத்து கட்சி மக்களவை உறுப்பினர்களும் டில்லிக்கு வந்து தங்கி உள்ளனர்.  இவர்களில் இமாசல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதி உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மாவும் ஒருவர் ஆவார்.  சுமார் 62 வயதாகும் இவர் பாஜகவை சேர்ந்தவர்.

நேற்று வெகு நேரமாகியும் இவரது அறைக் கதவு திறக்கப்படவில்லை.   அவரது உதவியாளர் இதனால் சந்தேகம் அடைந்துள்ளார். அதையொட்டி அவர் காவல்துறை கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.  காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய படி ராம் ஸ்வரூப் இறந்து காணப்பட்டுள்ளார். இதையொட்டி நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி ஆகி உள்ளது.  ஆனால் அவர் கடிதம் ஏதுவும் எழுதி வைக்காததால் இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.  அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இவர் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு  இரங்கல் தெரிவித்துள்ளார்.