பரேலி
உத்திரப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் மகளின் காதல் திருமணம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை பதிவு செய்யப்பட உள்ளது.
உத்திரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா. இவர் பிராமண வகுப்பை சேர்ந்தவர். அபிதேஷ் குமார் என்னும் ஒரு தலித் வாலிபரை இவர் மகள் சாக்ஷி மிஸ்ரா விரும்பினார். தங்கள் திருமணத்துக்கு சம்மதம் கிடைக்காது என்பதை அறிந்த சாக்ஷி மிஸ்ரா தனது காதலருடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்துக் கொண்டார். அவர்கள் இருவரும் ஜூலை 3 முதல் தலைமறைவாக உள்ளனர்.
இடையில் ஒருமுறை சாக்ஷி தனது கணவருடன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு தனக்கு தன் குடும்பத்தினரால் கொலை மிரட்டல் உள்ளதால் காவல்துறை பாதுகாப்பை கோரி இருந்தார். அவர் தாம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள் ராம் ஜானகி கோவில் அர்ச்சகர் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டதாகவும் அதற்கான சான்றிதழ் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அது போலி சான்றிதழ் என ராஜேஷ் மிஸ்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சாக்ஷி தாம் தற்போது பத்திரமாக உள்ளதாகவும் தனது வீடியோ பதிவு வெளியான பிறகு உண்மை அறிந்த காவல்துறையினர் தமக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பம் அளித்துள்ளார். அந்த விண்ணப்பம் வரும் 15 ஆம் தேதி அதாவது நாளை விசாரணைக்கு வருகிறது. அன்று சாக்ஷியும் அபிதேஷ் குமாரும் தங்கள் திருமணத்தை நீதிமன்றத்தில் பதிய உள்ளனர்.