போபால்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் இரு செயலர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இ டெண்டர் விடப்பட்டதில் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்

நரோத்தம் மிஸ்ரா

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை பாஜக  உறுப்பினர் நரோத்தம் மிஸ்ரா ஆவார். மூத்த பாஜக உறுப்பினரான மிஸ்ராவிடம் வீரேந்திர பாண்டே, நீலேஷ் அவாஸ்தி ஆகியோர் செயலாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த ஏப்ரலில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு இ-டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது

அவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம்  மாலை பாண்டே, அவாஸ்தி ஆகியோரது வீடுகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிகாரிகளின் இந்த சோதனை நேற்று காலையும் தொடர்ந்தது. இந்த சோதனையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் கே.என்.திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர் பாண்டே, அவாஸ்தி ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாண்டே, அவாஸ்தி வீடுகளில் இருந்து சில ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாகவும் திவாரி தெரிவித்தார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நரோத்தம் மிஸ்ரா இந்தக் கைது குறித்துக் கூறும்போது, “ஏற்கனவே இந்த டெண்டர் விடப்படும்போது புகார் வந்ததால் அதை நாங்கள் ரத்து செய்துள்ளோம். தற்போதைய முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.