கோரக்பூர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால், ஐபிஎஸ் அதிகாரி மக்கள் முன்னிலையில் கண்ணீர் கதறி அழுத சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அடுத்த கரீம் நகர் பகுதியில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். மக்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால். மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
காவல்துறையினர் பெண்களை தாக்கியதாகவும், 80 வயது மூதாட்டியை இழுத்து சென்றதாகவும் பொதுமக்கள் எம்.எல்.ஏவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சர்கிள் ஆபிசர் சாரு நிகம் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியிடம் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.
அதோடு அந்த ஐ.பி.எஸ் அதிகாரியை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் அதிகாரி, கண்ணீர்விட்டு அழுதார். பிறகு கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். இதை செல்போனில் படம் பிடித்த சிலர், சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
தற்போது, “மதுக்கடையை அகற்றப் போராடிய மக்களை காவல்துறையினர் தாக்கியது தவறுதான். அதற்காக ஒரு பெண் அதிகாரியை ஆபாசமாக அந்த எம்.எல்.ஏ. ஏசியது மன்னிக்க முடியாத குற்றம்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.