நீமுச், தெலுங்கானா
தெலுங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ஆர் எஸ் எஸ் பயிற்சிகளில் கலந்துக் கொள்ளாதவர்கள் இந்துக்கள் அல்ல என கூறி உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நீமுச் என்னும் இடத்தில் இந்து உத்சவ சமிதி என்னும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் மற்றும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் சாட்சி மகராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ராஜா சிங் எப்போதுமே தனது உரையின் மூலம் பல பரபரப்பை உண்டாக்கி வருவது தெரிந்ததே. தற்போது இந்தக் கூட்டத்திலும் ஒரு புது பரபரப்பை உண்டாக்கி உள்ளார்.
ராஜா சிங், “ஷாகா என அழைக்கப்படும் ஆர் எஸ் எஸ் பயிற்சிக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளதவர்கள் இந்துக்கள் அல்ல. அந்த பயிற்சிக் கூட்டங்களில் கலந்துக் கொள்பவர்கள் நாட்டு நன்மைக்காக கலந்துக் கொள்ளும் தேசியவாதிகள் ஆவார்கள். இந்த ஷாகாக்களில் கலந்துக் கொள்ளாதவர்கள் நாட்டுக்கும், நமது இந்து மதத்துக்கும் எந்த ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள்.” என தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாட்சி மகராஜ், “அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் வேறுபட்டிருந்தாலும் அனைத்தையும் உருவாக்கியவர்கள் இந்துக்களே. நீங்கள் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மீதோ சட்டசபை உறுப்பினர் மீதோ கோபம் இருக்கலாம். ஆனால் அதற்காக பாரத மாதாவையோ பாரதப் பிரதமர் மோடியையோ தண்டிக்கக் கூடாது” என உரை ஆற்றினார்.
இவர்கள் இருவரின் உரையும் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகவும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
தெலுங்கானா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் ரஜோரா, “யார் இந்துக்கள், யார் இந்துக்கள் இல்லை என முடிவு செய்ய இவர்களுக்கு அதிகாரம் இல்லை. இந்துக்கள் குடும்பத்தில் பிறந்தோர் அனைவரும் இந்துக்களே. எங்களுக்கு ஆர் எஸ் எஸ் இடம் இருந்து எந்த ஒரு சர்டிபிகேட்டும் தேவை இல்லை.
இந்துக்களில் 1% பேர் கூட ஷாகாக்களுக்கு செல்வதில்லை. ஆனால் இந்த அரசியல்வாதிகள் தேவையில்லாமல் இதை பெரிதாக்கி, இந்துக்களிடையே ஆர் எஸ் எஸ் இயக்கத்தை வளர்க்க முயற்சி செய்தின்றனர்.” என தெரிவித்துள்ளார்.