லகிம்பூர்
பெண்களைக் கேலி செய்ததால் கைதானவரைத் தடாலடியாகக் காவல்நிலையத்தில் புகுந்து உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் அழைத்துச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கூட்டு பலாத்காரக் கொலை நிகழ்வு பாஜக அரசுக்கு கடும் பின்னடைவை அளித்துள்ளது. அதையொட்டி நாடெங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது ஒரு பேச்சுப் பொருள் ஆகி உள்ளது. தற்போது அதை நிரூபிப்பது போல் மேலும் ஒரு நிகழ்வு உபி மாநிலம் லகிம்பூர் பகுதியில் நேற்று முன் தினம் நிகழ்ந்துள்ளது.
லகிம்பூர் பகுதியில் உள்ள முகமதி காவல் நிலையத்தில் பாஜக தொண்டர் ஒருவர் பெண்களைக் கேலி செய்ததற்காக கைது செய்யப்பட்டு லாக் அப்பில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த பகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான லோகேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது மகன் நள்ளிரவில் மறியல் நடத்தி அதன் பிறகு ஆதரவாளர்களுடன் காவல்நிலையத்துக்குள் புகுந்துள்ளார்
அங்கு லோகேந்திரா, அவர் மகன் மற்றும் தொண்டர்கள் காவல்துறையினரை மிரட்டி லாக் அப் சாவியை வாங்கி உள்ளனர். பெண்களைக் கேலி செய்து கைதான நபரை லாக் அப்பை திறந்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோ பதிவாகிப் பரவத் தொடங்கியது. செய்தியாளர்கள் இந்த பரபரப்பு செய்தி குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து உள்ளூர் காவல்துறையினர் எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் லோகேந்திர பிரதாப் சிங் இடம் தொலைப்பேசியில் பேசி உள்ளனர். அப்போது அவர் அந்த பகுதியில் மறியல் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை எனவும் இது தமது நற்பெயரைக் கெடுக்கச் செய்யப்பட்டுள்ள சதி எனத் தெரிவித்துள்ளார். வீடியோ குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.