சிம்லா

முன்னாள் ராணுவ அதிகாரியும் மத்திய இணை அமைச்சருமான வி கே சிங் காஷ்மீர் மாநிலம் 2004-12 வரை அமைதியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் வி கே சிங் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். இவர் நேற்று சிம்லாவில் ஒரு பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டார். . அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த சந்திப்பில் அவர் காஷ்மீர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வி கே சிங், “புல்வாமா தாக்குதல் பல உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சுமார் 40 உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளன. இந்த தாக்குதலுக்கு இந்தியா நிச்சயம் பழி வாங்கும். ஆனால் அந்த நடவடிக்கைகள் அமைதியாகவும் முழுமையான திட்டமிடுதலுக்கு பிறகும் நடக்கும்.

அமெரிக்கா அல் கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின் லாடனை எவ்வாறு திட்டமிட்டு அழித்ததோ அதைப் போல் இந்தியாவும் புல்வாமா தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை அழிக்கும். இந்தியாவை பொறுத்த வரை அந்நாடு யாரையும் சீண்டாது. ஆனால் இந்தியாவை சீண்டியவனை சும்மா விடாது.

காஷ்மீர் மாநிலம் கடந்த 2004-12 வரை அமைதியாக இருந்தது. அதன் பிறகு தீவிரவாத இயக்கங்கள் அங்கு அதிகரித்து வன்முறை நிறைந்த பூமியாக மாறியது. அதை விரைவில் நமது அரசு ஒடுக்கும். அது சர்ஜிகல் ஸ்டிரைக்காகவும் இருக்கலாம் அல்லது நேரடி போராகவும் இருக்கலாம்” என தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்ததாக பாஜக அமைச்சர் வி கே சிங் கூறிய கால கட்டங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.