பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ப. சிதம்பரத்தின் இந்த பேச்சு பாஜக-வினரை கொதிப்படைய வைத்துள்ளதுடன் ப. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்குவதற்கு சற்று முன்பு, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் அறிக்கை ஒரு அரசியல் புயலை உருவாக்கியுள்ளது.

ஊடகம் ஒன்றின் நேர்காணலில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சிதம்பரம் கேள்விகளை எழுப்பினார்: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் உண்மையில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா? இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? மேலும், இந்தத் தாக்குதலில் உள்நாட்டு பயங்கரவாதிகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதா ? என்றும் கேள்வி எழுப்பினார்.
தாக்குதலுக்குப் பிறகு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) என்ன வேலை செய்தது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பயங்கரவாதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளார்களா ? என்றும் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பது உறுதியா? என்றும் கேள்வி எழுப்பிய சிதம்பரம் இதனுடன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட இழப்புகளை மறைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
போரில் இரு தரப்பினரும் இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்று கூறிய அவர், உலகப் போரில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளை பிரிட்டன் தினமும் வெளியிட்டது. இந்தியாவும் இதைச் செய்ய வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் மறைக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசவில்லை என்றும் கூறினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடியும், பேரணிகளில் உரையாற்ற முடியும், பிறகு ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று அவர் கேள்விஎழுப்பினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியாவே அறிவிக்கவில்லை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அறிவிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டிய சிதம்பரம், இதைப் பற்றி விவாதிக்க அரசாங்கம் பயப்படுவதாகக் குறிப்பிட்டார்.