புதுடெல்லி: பாகிஸ்தான் என்றால் வானம் வரை குதிக்கும் பாரதீய ஜனதா – ஆர்எஸ்எஸ் சகாக்கள் மற்றும் அவர்களின் வலதுசாரி ஆதரவாளர்கள், சீனா என்று வந்துவிட்டால் எப்போதும் கப்சிப் ஆகிவிடுவது வழக்கம்தான்.
இன்றைய ஒரு இக்கட்டான நிலையில், இந்திய வீரர்கள் பலர் கொல்லப்பட்ட சூழலில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு என்னவானது என்ற கேள்விக்கு சரியான விடை தெரியாத நிலையில், மோடியை எதற்காக சீனா புகழ்கிறது என்று ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை சீனாவுக்கு எதிரான காட்டமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலைமை இப்படி இருக்க, கடந்த 2014ம் ஆண்டிலேயே, சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் பாடம் படிக்க பெரிய ஆர்வம் காட்டியுள்ளனர் காவிகள் என்பதை நாம் இப்போது நினைவுகூற வேண்டியுள்ளது.
உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக திகழ்வது சீன கம்யூனிஸ்ட் கட்சி. இந்த சாதனையை முறியடித்து, அந்த இடத்தில் பாரதீய ஜனதாவைக் கொண்டுவரவும், தமது கட்சி உறுப்பினர்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பயிற்சி கொடுக்கும் முறையை அறிந்துகொள்ளவும், அந்தக் கட்சியின் சட்டஅவை உறுப்பினர்களின் 13 பேர் அடங்கிய குழுவினர், கடந்த 2014ம் ஆண்டே சீனாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
பீஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கு, அந்தக் குழுவினர் ஒருவார காலம் பயணம் மேற்கொண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உள்கட்டுமான அமைப்பு, அரசியல் செயல்பாடு மற்றும் மக்கள் நலன்மிகுந்த நாட்டை உருவாக்கியதில் அதன் பங்கு ஆகியவற்றை அறிய சென்றிருந்தனர்.
அவற்றையெல்லாம் அவர்கள் எந்தளவிற்கு அறிந்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்! மேலும், தங்கள் பயணத்தில், அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாடவும் செய்தனர். மேலும், பீஜிங்கிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயிற்சி பள்ளிக்கும் அவர்கள் சென்றனர்.
பயணம் முடிந்து, தங்களின் அறிக்கையை, அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்த அமித்ஷாவிடம் ஒப்படைத்தனர். உலக அதிசயமாக அவர்கள் நிறுவிய படேலின் சிலையும் சீன தயாரிப்புதான்!
இன்றைய ஒரு நெருக்கடியான சூழலில், காவிகளின் சீனப்பாசம் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.