ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாட்டின் அனைத்து மூலையில் இருந்தும் செங்கல் மட்டுமன்றி பணமும் பொருளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது, இந்தியர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் உள்ளது.

கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதோடு அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது, அதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த கட்டுமான பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ராமர் கோயில் கட்ட வழங்கப்பட்ட நிதி இங்குள்ள நிலங்களை அதிக விலைகொடுத்து வாங்கவும், சாமானிய மக்களின் மிச்ச மீதி இடங்களை மிரட்டிப் பிடுங்கவும் பயன்படுத்தப்படுகிறது, அறக்கட்டளையின் பணத்தை பாஜக தலைவர்கள் மோசடி செய்து சுருட்டி வருகின்றனர் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள பலகோடி மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் இவர்கள், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக மக்கள் வழங்கிய காணிக்கை குறித்து சிறிதளவு கூட சிந்திப்பதில்லை என்றும் தெரிவித்தார்