லக்னோ
இந்து – இஸ்லாமியர் திருமணத்தை லவ் ஜிகாத் எனக் கூறும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் தனது மருமகளுக்கு இஸ்லாமிய மணமகனை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத் தலைவர்கள் இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என விமர்சித்து வருகின்றனர். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்துப் பெண்ணாக இருந்து இஸ்லாமியராக மாறி இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்துக் கொண்ட ஹாதியா என்னும் பெண்ணுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமின்றி இந்த லவ் ஜிகாத் இந்து மதத்தை அழிக்கவே இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டது என உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ராம்லால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று ராம்லாலின் மருமகள் (சகோதரி மகள்) திருமணம் லக்னோவில் நடந்தது. அவர் இஸ்லாமியரான காங்கிரஸ் தலைவர் சுர்கீதா கரீம் மகனை மணந்துள்ளார்.
இந்த திருமணத்துக்கு வந்து மணமக்களை ராம்லால் ஆசிர்வதித்துள்ளார். லக்னோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான தாஜ் விவந்தாவில் நடந்த இந்த திருமணத்துக்கு மத்திய பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, உத்திரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மற்றும் பல அமைச்சர்கள் உள்ளீட்ட பாஜகவினர் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு ஆசிகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாஜக அமைசர் ஐ பி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டரில், “நமது கட்சியின் பல மூத்த தலைவர்கள் இஸ்லாமியர்களால் நமது இந்துத்வாவுக்கு கடும் மிரட்டல் உள்ளதாக எச்சரிக்கின்றனர். ஆனால் அவர்களால் தங்கள் வீட்டு பெண்களை அந்த மிரட்டலில் இருந்து காக்க முடியவில்லை. அந்தப் பெண்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தால் அது லவ் ஜிகாத் இல்லை. குடும்ப விஷயமாகி விடுகிறது” என பதிந்துள்ளார்.
இது குறித்து ராம்லால் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். ராம்லால் பாஜகவில் சேரும் முன்பு ஆர் எஸ் எஸ் அமைப்பில் தீவிர தொண்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.