சண்டிகர்
அரியானா மாநில பாஜக துணைத்தலைவர் சந்தோர்ஷ் யாதவ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
தற்போது அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அரியானாவில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அரியானாவின் அட்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய மந்திரி ராவ் இந்திரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அட்லி தொகுதியில் சந்தோஷ் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அரியானா பாஜக மாநில துணைத்தலைவர் சந்தோஷ் யாதவ் நேற்று கட்சியில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.