போபால்
மத்தியப் பிரதேசத்தில் விபசார விடுதி நடத்திய பாஜக தாழ்த்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு ஆசை காட்டி விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி விசாரணையில் ஈடுபட்ட போலீசார் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் பல பெண்களை இது போல வேலைவாய்ப்பு ஆசை வார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மத்தியப் பிரதேச விபசாரத் தடுப்பு காவல்துறை சூபிரண்ட் சைலேந்திர சௌகான், “போபால் நகரில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் விபாசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வட கிழக்கு இந்தியப் பகுதி மற்றும் தென் இந்தியாவில் உள்ள வேலை தேடும் பெண்களின் விவரங்களை சேகரித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அளிப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்து அதன் மூலம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த ஒன்பது பேரையும் கைது செய்து அத்துடன் இவர்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அடைத்து வைத்திருந்த 4 பெண்களை மீட்டுள்ளோம்.
மேலும் பல பெண்கள் இவர்களிடம் மாட்டி உள்ளதால் அவர்களை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஒன்பது பேர் கொண்ட கும்பலில் தலைவராக செயல்பட்டு வரும் நீரஜ் சக்கியா என்பவர் பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு செயலாளராக பதவி வகித்து வருகிறார். ” எனத் தெரிவித்துள்ளார்.
நீரஜ் சக்கியா கைது செய்யப்பட்டதை அடுத்து பாஜக அவரைக் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது. மேலும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலில் அவருக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என கூறிய பாஜக நீரஜ் பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு செயலாளராக நியமிக்கப் பட்ட கடிதம் வெளியான பின் கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.