அகமதாபாத்: வெறும் 25 வயதான தன்னைப் பார்த்து, பாரதீய ஜனதாக் கட்சி பயப்படுகிறது என்று விமர்சித்துள்ளார் பட்டேல் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஹர்திக் படேல்.

அவர் கூறியுள்ளதாவது, “தீவிரவாத தாக்குதல் குற்றச்சாட்டிற்கு ஆளான சாத்வி பிரக்யாவிற்கு பாரதீய ஜனதா தேர்தலில் வாய்ப்பளிக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும் போலும். ஆனால், என்னால் நிச்சயமாக முடியாது.

பாரதீய ஜனதா என்னைப் பார்த்து பயப்படுவதால்தான், நான் செல்லும் கூட்டங்களிலெல்லாம் ஆட்களை ஏவி தொந்தரவு விளைவித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு வெறும் 25 வயதேயான என்னைப் பார்த்து பயம்.

எனது ஹெலிகாப்டர் தரையிறங்க தொடர்ந்து அனுமதி மறுக்கிறார்கள். அவர்களுக்கு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கைப் போய்விட்டதால்தான் இவ்வாறு செய்கிறார்கள்” என்றார்.

– மதுரை மாயாண்டி