ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வேட்பாளர் தேர்வில் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது.
வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27-ம் தேதி மற்றும் ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக். 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதையொட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் மாநில தலைமையத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக எஸ்.சி பிரிவு தலைவர் ஜெகதீஷ் பகத், “
”கடந்த 18 ஆண்டுகளாக பாஜகவுக்காக நாள் முழுவதும் உழைத்து வருகிறேன். ஆனால் இன்று எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்பி மோகன்லால் 2 நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்ததால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பட்டியலையும் திரும்பப் பெறாவிட்டால், பாஜக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்”
எனத் தெரிவித்துள்ளார்.