டில்லி

சுப்ரமணியன் சாமியின் கடும் விமர்சனத்தையும் மீறி பாஜக அமித் மாளவியாவை ஐடி குழு தலைவராக மீண்டும் நியமித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார்.  சுமார் இரு வருடங்கள் முன்பு தொழிலதிபர் அதானி, உள்ளிட்டோர் பண மோசடி செய்வதாகவும் அதற்கு ஒரு சில பாஜக தலைவர்கள் துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதற்கு பாஜக ஐடி குழு தலைவர் அமித் மாளவியா உள்ளிடோர் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர்.  டிவிட்டரில் அவரைப் பற்றி பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.   சமீபத்தில் அமெரிக்க விசாரணைக்குழு வெளியிட்ட தகவலின்படி அதானி குழும நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் பல சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதையொட்டி சுப்ரமணியன் சாமி, “பாஜக ஐடி குழு ரவுடித்தனமாக மாறி விட்டது. இந்த குழு உறுப்பினர்கள் சிலர் போலி ஐடி மூலம் என்னைப் பற்றி டிவிட்டரில் தனிப்பட்ட முறையில் தவறான செய்திகள் வெளியிடுகின்றனர்.  என்னுடைய ஆதரவாளர்களும் பதிலுக்கு அதையே செய்யலாம்.  தற்போது பாஜக இந்த ரவுடியிசம் பற்றிப் பொறுப்பு ஏற்காததைப் போல் நானும் அதற்குப் பொறுப்பு ஏற்க மாட்டேன்” என டிவிட்டரில் பதிந்தார்.

மேலும் அவர், “நான் இவர்களை லட்சியம் செய்வதில்லை.  ஆனால் பாஜக இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  ஐடி குழு தலைவர் மாளவியா ஒரு வன்முறை குணம் கொண்டவர்.  நமது கட்சியில் புருஷோத்தமர்கள் நிறைந்துள்ளனர்.   இது போல ராவணன் அல்லது துச்சாதனன் கிடையாது” எனப் பதிந்தார்.

ஆனால் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சாமியின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகக் கருதவில்லை எனத் தோன்றும்படியான ஒரு நிகழ்வு சனிக்கிழமை நடந்துள்ளது.  அன்று அவர் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  அதில் தேஜஸ்வி சூர்யா இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் பலருக்குப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக சுப்ரமணியன் சாமி கடுமையாக விமர்சித்த அமித் மாளவியாவுக்கு மீண்டும் ஐடி குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம் சுப்ரமணியன் சாமியின் பேச்சை பாஜக தலைவர்கள் மதிப்பதில்லை என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.