மும்பை
பாஜகவுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கச் சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிவசேனா கூறி உள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், செய்தியாளர்களிடம், “மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 3-வது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் பாஜக போட்டியிட முடிவு செய்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளைத் தான் நம்பி உள்ளனர். ஆகவே பாஜக சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இது குறித்த எல்லா தகவல்களும் எங்களுக்கு வருகின்றன. எங்களது மகாவிகாஸ் அகாடி அரசும் தேர்தலில் தீவிரமாகப் போட்டியிடுகிறது.
எங்களிடம் அமலாக்கத்துறை இல்லை. இந்த தேர்தலுக்காக பாஜக பணத்தைக் கண்டபடி செலவு செய்து வருகிறது. மாறாக. அவர்கள் அதை சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.