டில்லி:
மத்திய பாஜக ஆட்சி 4 ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்துள்ளது. இநிலையில் பாஜக. அரசை விமர்சிக்கும் வகையில் ‘‘துரோகம்’’ என்ற புத்தகத்தை காங்கிரஸ் இன்று டில்லியில் வெளியிட்டது.
இந்த விழாவில் காங்கிரஸ் பொது செயலாளர் அவினாஷ் பாண்டே, பேசுகையில், ‘‘மோடி தலைமையிலான பாஜக அரசில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 2 கோடி புதிய வேளைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக கூறிய மோடி 2016-17-ம் ஆண்டில் வெறும் 4.16 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளார்.
சிறுபானமையினர், தலித், பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக உணருகின்றனர். மோடி அரசு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.
காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘பாஜக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை. ஒவ்வொருவரும் தினமும் தூக்கமற்ற இரவை கழித்து வருகின்றனர்’’ என்றார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில்,‘‘ மோடி, அமித்ஷா ஆகியோர் நாட்டிற்கு பெரும் தீங்கு. நம்பிக்கை துரோகம், தந்திரம், பழிவாங்குதல், பொய்கள் என மோடி ஆட்சியை 4 வார்த்தைகளில் கூறிவிடலாம்’’ என்றார்.