டில்லி
பாகிஸ்தானுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் பாகிஸ்தான் அவருக்காக வாக்கு கேட்கிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது செய்தியாளர் சந்திப்பில், “இந்தியாவில் பாஜக வெற்றி பெற நான் விரும்புகிறேன். பாஜக வெற்றி பெற்றால் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கப் பட்டு காஷ்மீர் பிரச்சினை முடிவடையும். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் வலதுசாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காணாது” என தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் பாஜகவுக்கு தேர்தலில் ஆதரவாக பேட்டி அளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாஜக வின் தலைவர்களில் பலர் காங்கிரஸ் கட்சியை பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி எனவும் அதனால் அந்த கட்சியினருக்கு தேச பக்தி இல்லை எனவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இம்ரான் கான் இவ்வாறு பேசியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “பாகிஸ்தான் அதிகார பூர்வமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது தர்போது தெரிய வந்துள்ளது.
அதனால் இம்ரான் கான் அவருக்காக வாக்கு கேட்கிறார். மோடிக்கு அளிக்கும் வாக்குகள் பாகிஸ்தானுக்கு அளிப்பதாகும்.
மோடிஜி, முதலில் உங்களுக்கு நவாஸ் ஷெரிபிடம் அன்பு இருந்தது. இப்போது உங்களுக்கு இம்ரான் கான் மிகவும் நெருங்கிய நண்பர் ஆகி உள்ளார்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.