கொல்கத்தா: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நாய்களை சுட்டுக் கொல்வது போல சுடப்படுவார்கள் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, பல்வேறு அரசியல் தலைவர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறகளில் பலர் உயிரிழந்தனர். அதில் இறங்கியவர்களின் சொத்துக்களை முடக்குவதாக அம்மாநில அரசு கூறியது.
இந்நிலையில், போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் நாய்களை போல சுட்டுக் கொல்லப்பட்டார்கள், அதுபோல சுடப்படுவார்கள் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
மேற்கு வங்கலத்தின் நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது மமதா பானர்ஜி ஏன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை.
அது அவர்களின் தந்தை வீட்டுச் சொத்தா? அவர்கள் உங்கள் வாக்காளர்கள் என்பதால் நீங்கள் (மமதா பானர்ஜி) ஒரு நடவடிக்கையும் எடுக்க சொல்லவில்லை. அரசின் சொத்துக்களை அவர்கள் எவ்வாறு அழிக்க முடியும்.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் உத்தர பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடந்தது போன்று சுட்டுத் தள்ளப் படுவார்கள். சொத்துககளை சேதப்படுத்துபவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் இங்கு வந்து நமது பணம், பொருள் ஆகியவற்றை அனுபவிப்பார்கள். இது என்ன அவர்களுக்கு சொந்தமான இடமா? என்று ஆவேசமாக பேசினார்.