ராஞ்சி

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் வாக்காளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றும் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.    இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளன.   ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1990  ஆம் வருடம் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளதால் அவர் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை நடத்தி வருகிறார்.   இன்று பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் நேற்று முன் தினம் லாலு பிரசாத் ராஞ்சி சிறையில் இருந்து வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் லாலுபிரசாத், “மோடி அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவில்லை.    அத்துடன் ஏற்கனவே உள்ள வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டை ஒழித்து வருகிறது.    மோடி தாம் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறார்.

தற்போது பாஜக நடத்தி வருவது ஒரு பகட்டான அரசாகும்.  இந்த அரசு உங்களை அடிமைகளாக்க பல பொய்களை கூறி வருகிறது.    அதாவது நாட்டுக்கு அச்சுறுத்தல், இந்துக்களுக்கு அச்சுறுத்தல், பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் என அச்சுறுத்தி மக்களை அடிமைகளாக்கி வருகிறது.

தற்போது நடைபெறும் தேர்தல் அரசியலமைப்பை காக்க நினைப்பவரகளுக்கும் அதற்கு எதிரானவர்களுக்குமான இறுதிப் போர் ஆகும்.   தற்போது மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர்.  தற்போதுள்ள நிலையில் அரசு மக்களை செய் அல்லது செத்து மடி என்னும் நிலையில் போர் புரிய வைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.