டெல்லி: உஜ்வாலா திட்டத்தில் மேலும் ஒருகோடி பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் ஒரு வீட்டுக்கு, மானியத்துடன் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த சிலிண்டருக்கான மானியம் 2015ம் ஆண்டு முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

2015ல் ஒரு சிலிண்டரின் விலை 998 என்று இருந்த நிலையில், 563 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. பின்னர் சந்தை விலைப்படி சிலிண்டருக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதற்கான மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 28.90 கோடி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் வரை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்பட வில்லை என கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் பெட்ரோலிய மானியமாக ரூ.40,915 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம், 12,995 கோடி ரூபாயாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரம் உஜ்வாலா திட்டத்தில், ஏற்கெனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் ஒரு கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு பெருமளவு தொகையை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.