இடைத்தேர்தல் முடிவால் கர்நாடக பாஜக ஆட்சி கவிழும்! வீரப்ப மொய்லி ஆரூடம்

Must read

டெல்லி: இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, கர்நாடகாவில் ஆட்சி கவிழும் என்று காங்கிரசின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக எடியூரப்பா உள்ளார். 224 பேர் கொண்ட சட்டசபையில் பாஜகவின் எண்ணிக்கை105.

காங்கிரசுக்கு 66 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதாதளம் 34 எம்எல்ஏக்களையும் பெற்றிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ இருக்கிறது. ஒட்மொத்தமாக எதிர்க்கட்சியினர் 101 பேர் இருக்கின்றனர்.

பெரும் சிக்கலுக்கு இடையே எடியூரப்பா ஆட்சியை செலுத்தி வருகிறார். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய எம்எல்ஏக்கள் இடைநீக்கம் ஒரு பக்கம் இருக்க, அதில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.

அந்த இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். தவறான ஆட்சி நிர்வாகம், திறமையில்லாத முதலமைச்சர் என மக்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவல்கள் படி, 15 தொகுதிகளில் 13 தொகுதிகளில் பாஜக தோல்வி அடையும். அவர் முதலமைச்சர் நாற்காலியை காலி செய்து கொண்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மத்திய அரசிடம் இருந்து மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை அவர் பெற்றுத் தரவில்லை. குறிப்பாக வெள்ள நிவாரண பணிகள் சிறப்பாக இல்லை. மாநில அரசு 38,000 கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசோ ரூ.1,200 கோடியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திருக்கிறது.

இது தான் அவரது திறமைக்கு ஒரு சான்று. பல மாவட்டங்களில் இன்னமும் வெள்ள நிவாரண பணிகள் நிறைவடையவில்லை என்றார். அப்போது, காங்கிரசுடன் கைகோர்க்க மாட்டேன் என்று தேவேகவுடா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வீரப்ப மொய்லி, 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதற்கொண்டு அவர் இப்படித் தான் பேசி வருகிறார் என்றார்.

More articles

Latest article