காங்டாக்

சிக்கிம் மாநிலம் முழுவதும் பெண்கள் நடத்தும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

வரும் 19 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்தத் தேர்தலில் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அரசு அமைத்திருந்த பாஜக தனித்து போட்டியிகிறது.

எனவே பாஜக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று சட்டசபைத் தேர்தலுக்காக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று 74 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையைக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று உள்ளன.

அவற்றில் முக்கியமாக, ‘அம்மா சமூக உணவகம்’ என்ற பெயரில் பெண்களைத் தலைமையாகக் கொண்டு, பெண்களே நடத்தும் மலிவு விலை உணவகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள், மாநிலத்தை வளப்படுத்தவும், விவசாயிகளின் நன்மைக்காகவும் வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.