புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக நிர்வாகிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அமைச்சரவை அனுப்பவும் கோப்புகளுக்கு அனுமதி தராமல், காலம் கடத்துவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருவதால், துணைநிலை ஆளுநர் மீது முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். அதிகாரம் இல்லாத பதவி எதற்கு என்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி கடந்த இரண்டு தினங்களாக சட்டசபைக்கு வராமல் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார்.  உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர்  அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் அடையவில்லை.

நேற்று புதுச்சேரிக்கு வருகை புரிந்த புதுச்சேரி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீண்டும் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு ரங்கசாமி செய்தியாளர்களிடம்,

“இன்று நடந்தது வழக்கமான சந்திப்பு தான். நிர்வாகத்தில் சில பிரச்னை வரும். அவை பேசி தீர்க்கப்படும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி மாநில அந்துஸ்து பெற வலியுறுத்துவோம். மாநில அந்துஸ்து கிடைக்கும் வரை எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் சில பிரச்னைகள் வரும். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. 2026 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபடுவோம்”

என்று தெரிவித்துள்ளார்.