டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மும்முனை போட்டி கண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக எந்தவொரு தொகுதி யிலும், வெற்றிபெறாத நிலையில், பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 47 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மேலும், ஏற்கனவே மூன்று முறை ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்த ஆம் ஆத்மி 21ல் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் ‘இண்டியா’ கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று நடந்தது.
மாலை 6:30 மணி நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளதுடன், ஒரு தொகுதியில் முன்னிலை உள்பட 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
ஆம்ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் வெற்றி உறுதியான நிலையில், ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவால் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்… உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.இந்த மகத்தான வெற்றிக்கு இரவும், பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் இன்னும் உறுதியாக, அர்ப்பணிப்புடன் இருப்போம்” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
டெல்லி மினி இந்தியா போன்றது, இங்கு அனைத்து மாநில மக்களும் வசிக்கின்றனர், அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்,
டெல்லிக்கு சேவை செய்ய எனக்கு இதுவரை வாய்ப்பு அளிக்காதது வருத்தத்தை அளித்தது. இப்போது நீங்கள் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள்: டெல்லி மக்கள் டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர், அதைத் தங்கள் சொத்தாகக் கருதியவர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர் என்றவர், உங்கள் அன்பை வளர்ச்சியின் வடிவத்தில் நூறு மடங்கு திருப்பித் தருவார்கள் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

தோல்வியை சந்தித்த ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எந்த எதிர்பார்ப்புடன் அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளார்களோ, அந்த எதிர்பார்ப்பை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில், பொதுமக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய சேவைகளை செய்துள்ளோம் . கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீர் வளம் உள்ளிட்ட துறைகளிலும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து நாங்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், சமூக சேவையையும் தொடர்ந்து செய்வோம். அதிகாரத்திற்காக நாங்கள் அரசியல் வரவில்லை என்பதால், மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். எங்கள் கட்சி தொண்டர்கள் தேர்தலில் சிறப்பாக பணியாற்றியனர். அவர்களுக்கு நன்றி”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.