பழனி
பழனி அருகே உள்ள மானூரில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பாஜகவின் சொல்படி நடப்பதாக குற்றச்சாட்டுகளை பலரும் கூறி வருகின்றனர். தர்மயுத்தம் நடத்துவேன் எனச் சொன்ன ஓ பன்னீர் செல்வம் மோடியின் சொற்படி எடப்பாடியுடன் இணைந்ததாக தெரிவித்தார். அத்துடன் தான் துணை முதல்வர் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதும் மோடியின் வற்புறுத்தலால் தான் என கூறினார். அதே நேரத்தில் அதிமுக அரசு மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும் பல விவகாரங்களில் பாஜகவை எதிர்ப்பதாகவும் கூறி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் பேருந்து நிலையத்தில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்தக் கம்பத்தில் திட்டிரேன பாஜகவின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் அதில் அதிமுக கொடியும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.