டில்லி
பாஜகவுக்கு கிடைத்துள்ள கருத்துக் கணிப்பு தகவலின்படி தோல்விக்கு வாய்ப்புள்ளதால் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பிரபல பாலிவுட் நாயகர் சன்னி தியோல் உள்ளிட்டோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினி, பாலிவுட் நாயகி ஜெயப்ரதா ஆகியோரும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். சென்ற தேர்தலின் போது மோடியை மட்டும் நம்பி களம் இறங்கி பெரும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு என்ன ஆயிற்று என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து வட நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுவதாவது :
மக்களவை தேர்தலில் இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இதில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 302 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இது மொத்த தொகுதிகளில் பாதிக்கும் அதிகமாகும். இதில் ஏராளமான பணம் விளையாடியதாகக் கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்ட தமிழகத்தின் வேலூர் தொகுதி சேர்க்கப்படவில்லை. அத்துடன் பல இடங்களிலும் மின்னணு வாக்கு இயந்திர மோசடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாஜக தனது உட்கட்சி பிரமுகர்கள் மூலம் ரகசிய கருத்து கணிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் வாக்குப்பதிவு நடந்த பல இடங்களில் பாஜகவுக்கு எதிரான சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள வெள்ள நேரத்தில் பாஜக அரசு தேவையான நிதி உதவி அளிக்கவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் நிறுத்தி உள்ளது. அத்துடன் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்பது அக்கட்சிக்கு முன்னேற்றத்தை அளித்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என கூறப்படுகிறது. மீண்டும் ஆட்சியை தொடர முயற்சிக்கும் பாஜக இனி தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டு அதன்படி அறிவிப்புக்களை வெளியிடுகிறது. ஆனால் நட்சத்திர வேட்பாளர்கள் கட்சியின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவுவார்கள் என்பது சந்தேகமே.
பாஜகவின் கவுதம் கம்பீர் மற்றும் சன்னி தியோல், காங்கிரசின் ஊர்மிளா மடோன்கர் ஆக்யோருக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் செல்வாக்கு இல்லை எனவே கூற வேண்டும். இவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கூட்டம் கூடுவது இவர்களை நேரில் பார்க்க வரும் கூட்டமாகும். அவை வாக்குகளாக மாறும் என்பதில் சிறிதளவும் உண்மை இல்லை. தற்போது வேலை இல்லா திண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் வேளையில் இது போல் நட்சத்திர வேட்பாளர்கள் அந்த சர்ச்சையை உடைப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி ஆகும்.
என அந்த ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளன.