டில்லி,
டில்லியில் ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்து பேசியதாக கடந்த 10ந்தேதி நாடு முழுவதும் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரதியஜனதா கட்சியினர் இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
அந்த தகவல் உண்மையல்ல என்றும், வேண்டுமென்றே ராகுல்மீது அவதூறை தூற்றும் வகையில் பாரதிய ஜனதாவினர் திட்டமிட்டு தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
முதலில் இதை மறுத்த காங்கிரஸ், பின்னர் இதுகுறித்து ராகுல் சீன தூதருடன் உள்ள புகைப்படம் உண்மைதான் என ஒத்துக்கொண்டது.
கடந்த ஏப்ரல் மாதம் டில்லியில் சீன உணவுகளின் ‘தயாயுத்ய் உணவு திருவிழா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சீன தூதர் முன்னிலையில் மத்திய ரெயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
இந்த உணவு திருவிழாவில் சீன தூதருடன் பாரதியஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு மேலும் பல கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அந்த விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் வதேரா ஆகியோருடன் சீன தூதர் நட்புறவோடு பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தை, தற்போது சிக்கிம் மாநில எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,
ராகுல்காந்தி சீன தூதருடன் உணவு திருவிழவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பாரதிய ஜனதாவினர், ராகுல் குறித்து அவதூறு பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்ப்பட்டு வந்தது.
தற்போது, அந்த புகைப்படம் ஏப்ரல் மாதம் சீன உணவு திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது.
பாரதியஜனதாவினர் வேண்டுமென்றே, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ்மீது அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை வேண்டுமென்றே வெளியிட்டு, மக்களை குழப்பி வருவது தெரிய வந்துள்ளது.