சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு அமித்ஷா, ஜெ.பி. நட்டா என பாஜக மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இவர்களுக்கு எல்லாம் மேலே உ.பி. சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
“சனாதனம் என்றால் என்ன? இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம் – சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது தவிர வேறொன்றுமில்லை.
சனாதனம் என்றால், அது நித்தியமானது, அதாவது, அதை மாற்ற முடியாது; யாரும் எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது, அதுதான் அர்த்தம்” என்றார் உதயநிதி.
மேலும், “சனாதனம் பெண்களுக்கு என்ன செய்தது? இது கணவனை இழந்த பெண்களை சதி என்ற பெயரில் நெருப்பில் தள்ளியது; கணவனை இழந்த பெண்களின் தலையை மொட்டையடித்து வெள்ளைப் புடவை அணியச் செய்து விதவையென்று தள்ளிவைத்தது; குழந்தைத் திருமணங்களை அரங்கேற்றியது” என்று கூறினார்.
திராவிட ஆட்சியில், “பெண்களுக்கு கல்வி உரிமையை வழங்கியதோடு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கட்டணமில்லா பேருந்து பயணமும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சமத்துவத்தை மறுப்பதே சனாதனம்” என்றும் பேசினார்.
சமீப காலங்களில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மத நடைமுறைகளை புறக்கணித்து, இந்துத்துவ அடையாளத்தை தரப்படுத்த சனாதன தர்மத்தை இந்துத்துவா அமைப்புகள் பயன்படுத்துகின்றன.
சாதி எதிர்ப்பு அமைப்புகள் இந்துத்துவா சக்திகளின் இத்தகைய தரப்படுத்தலை இயல்பாகவே எதிர்த்ததோடு, டிஜிட்டல் யுகத்தில் சாதியத்தை நிலைநிறுத்துவதாக விமர்சித்துள்ளன.
உதயநிதியின் கருத்துகளை பாஜக தனது அரசியல் வசதிக்கேற்ப மாற்றியிருக்கலாம். ஆனால், அது சனாதன தர்மம் குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மதவாத இந்துத்துவா கட்சிகளின் முகத்திரையை கிழிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்துத்துவாவும் சாதி எதிர்ப்பு அரசியலும் வரலாற்று ரீதியாக ஒன்றுக்கொன்று விரோதமாகவே இருந்து வருகின்றன. இந்துத்துவா என்பது இயல்பிலேயே சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது.
இதனாலேயே திராவிட, அம்பேத்கரிய மற்றும் மண்டல் கட்சிகளை நீண்ட காலமாக காவி குடையிலிருந்து விலக்கி வைத்தது.
இருப்பினும், இந்த முரண்பாடுகளை முறியடிக்கக்கூடிய வகையில் தேசியவாதம் மற்றும் வளர்ச்சியை குறித்த ஒரு அரசியல் கதையை பின்னினார் மோடி.
மோடியின் தலைமையின் கீழ் உள்ள பாஜக, அரசியல் துறையில் இந்த முரண்பாடுகளுக்குள் சிக்காமல் பார்த்துக் கொண்டது, மற்ற எதையும் விட பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டுவதன் மூலம் இந்துத்துவாவை பிரபலப்படுத்துவதைத் தேர்ந்தெடுத்தது.
உண்மையில், பிஜேபியின் சமீபத்திய வெற்றிகளுக்குக் காரணம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமூகங்களில் நிலவும் சாதிப் பாகுபாடு மூலமாக கணிசமான வாக்குகளை அதிகரித்ததே அதன் வெற்றிக்கு காரணம்.
சமூக நீதி என்ற ஒற்றைக் கோட்பாடு கடந்த காலங்களில் பலமுறை இந்துத்துவாவை வீழ்த்தியிருப்பதை மனதில் வைத்துக் கொண்டே சனாதன தர்மத்தின் உள்ளார்ந்த சாதிவெறிக்கு எதிராகப் பேசிய உதயநிதி மீதான தாக்குதலை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சாதி அமைப்பை வரையறுத்து, சமூகங்களுக்கு கடமைகள், தொழில்கள் மற்றும் அவற்றுக்கான படிநிலைகள் ஒதுக்கீடு செய்ததற்காக சனாதன தர்மம் அடிக்கடி பாராட்டப்படுகிறது.
“ஆகம இந்துமத”த்தின் மற்றொரு பெயர் தான் சனாதனம் என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். “யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் ஆண்டிசெமிட்டிசம் சித்தாந்தத்துக்கும் தீண்டத்தகாதவர்கள் என்று இந்துக்களின் தத்துவத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை” என்று 1943 ம் ஆண்டு அம்பேத்கர் எழுதினார்.
மேலும், சனாதன தர்மம் என்ற கருத்து 19 ஆம் நூற்றாண்டில் வடிவம் கொடுக்கப்பட்டது, இது ஆர்ய சமாஜ் மற்றும் பிரம்ம சமாஜ் போன்ற சீர்திருத்த அமைப்புகளுக்கு எதிரான இயக்கமாக இருந்தது, இது சிலை வழிபாடு, கணவனை இழந்த பெண்களை தீயில் தள்ளும் ‘சதி’, மற்றும் குழந்தை திருமணம் போன்ற பிற்போக்கு நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கியது.
சீர்திருத்த அமைப்புகளின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஆகம இந்துக்கள், ‘பாரத தர்ம மகாமண்டல்’, ‘சனாதன தர்ம ரக்ஷினி சபா’ மற்றும் ‘லாகூர் சனாதன் தர்ம சபை’ போன்ற அமைப்புகளை உருவாக்கியது. இந்த குழுக்கள் பெரும்பாலும் சனாதன தர்மத்தின் கோட்பாடுகளின்படி இந்து அடையாளத்தை ஒருமைப்படுத்தவும் – மேலும் தரப்படுத்தவும் முயற்சித்தன.
பிஜேபியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்தக் குழுக்களை ஆலோசகர்களாகக் கருதுகின்றன, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு செல்வாக்கு உள்ளபோதிலும் 19ம் நூற்றாண்டின் நடைமுறைகளை ஆதரிப்பது ஆகம இந்துத்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஆர்ய சமாஜ் மற்றும் ராதா சோமிஸ் அல்லது ராமகிருஷ்ணா மிஷன் போன்ற சீர்திருத்த அமைப்புகள் 19 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து வெவ்வேறு நிறுவனங்களாக பரிணமித்துள்ளதோடு ஆகம இந்து குழுக்களுக்கும் இவர்களுக்கும் உண்டான இடைவெளி குறைந்து வருவதோடு பாஜக-வுடன் நெருக்கம் காட்டுவதில் மற்ற கட்சிகளுக்கு சவால்விடும் விதமாக செயல்படுகின்றன.
இருப்பினும், சனாதன தர்மத்தை வலியுறுத்தி இந்து அடையாளத்தை தரப்படுத்துவதற்கான முயற்சிகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டால், இந்த குழுக்களுக்கு இடையிலான வரலாற்று வேறுபாடுகள் மீண்டும் தலையெடுக்கக்கூடும்.
இதேபோல், சனாதன கோட்பாடுகளில் உள்ள சாதிய நடைமுறைகளுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேசிய 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதிகளான சுவாமி விவேகானந்தர் மற்றும் நாராயண குரு போன்றவர்கள், இப்போது சங்பரிவாரங்களால் அடிக்கடி இந்து மதத்தின் தூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
விவேகானந்தர் குறித்து Vivekananda: The Philosopher of Freedom என்று புத்தகத்தை எழுதிய கோவிந்த் கிருஷ்ணன் வி, தி வயர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் :
“உலகின் முன்னணி நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மீது க்ஷத்திரியர்கள் மற்றும் பிராமணர்களின் சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையே என்று விவேகானந்தர் கருதினார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு தென்னிந்தியாவில் நிகழ்த்திய தொடர் உரைகளில், அனைத்து சாதி பாகுபாடுகளையும் தீண்டாமையையும் அழிக்க வேண்டும் என்று விவேகானந்தர் அழைப்பு விடுத்தார்.
இது சாதிக்கு எதிரான முதல் கட்சி சார்பற்ற வெகுஜன இயக்கமான கேரளாவில் ஈழவ இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாராயண குரு மற்றும் விவேகானந்தரின் சாதி பற்றிய கருத்துக்களுக்கு இடையே ஒரு நல்ல ஒற்றுமை உள்ளது, குறிப்பாக அவர்கள் இருவரும் வேதாந்தவாதிகள்.
இந்தியாவில் இருந்து சாதி ஒழிந்துவிடும் என்று விவேகானந்தர் நம்பினார். சாதி வேறுபாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும், ஜனநாயக சிந்தனைகள் முன்னேறும்போது இறுதியில் மறைந்துவிடும்” என்று கோவிந்த் கிருஷ்ணன் கூறுகிறார்.
சாதியப் பழக்கவழக்கங்கள் பெருமளவு மறைந்துவிட்ட போதிலும் இன்றைய இந்தியாவில் அதன் சமூகத்திலும் அதன் அரசியலிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
உதயநிதியின் கருத்துக்கள், அடக்குமுறை, வன்முறை மற்றும் இழப்பிற்கு வரலாற்றுக் காரணமான அடிப்படைப் பிரச்சினையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நன்றி தி வயர்