சென்னை

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம் எல் ஏ ஆன திருமகன் ஈ.வெ.ரா. உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதையொட்டி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

சமீபத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து 4 ஆண்டுகளில் 2 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த 1௦-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டபடி தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

”கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், தி.மு.க.வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. \

என்று தெரிவித்துள்ளார்.