அகமதாபாத்
குஜராத் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அதாவது நாளை குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கான பரப்புரை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. முன்னாள் காங்கிரஸார் 5 பேர் இந்த தேர்தலில் பாஜக சார்பில் களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு குற்றச்சாட்டை வீடியோ ஆதாரத்துடன் எழுப்பி உள்ளது. அந்த வீடியோவில் முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சோம்பாய் படேல் மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு ராஜினாமா செய்த 8 உறுப்பினர்களுக்கு பாஜக தல ரூ.10 கோடி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்ட குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவடா மற்றும் முன்னாள் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா ஆகியோர் பாஜகவின தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாகக் குற்றம் சாட்டினர். மேலும் இந்த வீடியோ மூலம் பாஜக பணம் அளித்தது பகிரங்கமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என மோத்வாடியா கேட்டு கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து குஜராத் மாநில பாஜக தலைவர் சோம்பாய் ராஜினாமாவின் போது தாம் கட்சித் தலைவராக இல்லை என தெரிவித்துள்ளார்.