மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள்  வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 6ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 6.5% வீழ்ச்சியை கண்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில், அதை பொய்யாக்கி வருகிறது தேர்தல் முடிவுகள். இதனால், உயர்வை சந்திக்கும் என எதிர்பார்த்த   இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் சார்ந்த முன்னிலை நிலவரம் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களை கடந்தாலும் இண்டியாக கூட்டணியும் 230 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் எதிரொலி பங்கு வர்த்தகத்தில் சலசலப்பை ஏற்பட்டு உள்ளது.

இதன் பயனாக,  சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவை கண்டுள்ளது. காலை 76,468 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி 70,882 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்துள்ளது.

நிஃப்டி 50 என்பது 1,400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. இன்று காலை 23,263 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி 50 தற்போது 21,801 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. சுமார் 6.05 சதவீதம் புள்ளிகள் சரிந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் சொல்லப்பட்டது இருந்தது. அதன் காரணமாக திங்கட்கிழமை அன்று பங்கு வர்த்தகம் உச்சத்தை எட்டிய நிலையில், இன்று பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

இது  கடந்த 2020-ம் ஆண்டின் மே மாதத்துக்கு பிறகு மிக மோசமான சரிவு என குறிப்பிடப்படுகிறது.