மானந்தாவடி

கேரள சட்டப்பேரவை தேர்தலில் மானந்தாவடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தாம் பாஜகவின் உறுப்பினர் கூட இல்லை என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இங்குள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக பாஜக வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.   நேற்று பாஜக சார்பில் போட்டியிடும் 115 வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சி அறிவித்தது.  இதில் மானந்தாவடி தொகுதியில் மணிகண்டன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் அங்குள்ள பனியா என்னும் பழங்குடி இனத்தின் ஒரே பட்டதாரி ஆவார்.  இவர் தனது பெயரை முகநூலில் மணிகுட்டன் என வைத்துள்ளார்.   இந்த பட்டியல் வெளியானதில் இருந்து பலரும் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.   ஆனால் தாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மணிகண்டன் மிகவும் வியப்பில் உள்ளார்.

இது குறித்து அவர் தாம் பாஜகவில் உறுப்பினரோ ஆர்வலரோ இல்லை எனவும் தமக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  இந்த தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் இங்குள்ள உள்ளூர் பிரபலங்களின் பட்டியலை பாஜக தயாரித்துள்ளதாகவும் ஆனால் அப்போதே மணிகண்டன் தாம் அரசியலுக்கு வர விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியில் உள்ள வேறு ஒருவரின் பெயருக்குப் பதிலாக மணிகண்டன் பெயர் தவறுதலாக இடம் பெற்று இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.    இந்த நிகழ்வு குறித்து உள்ளூர் மக்கள் பாஜகவை பற்றி மிகவும் கேலியாகப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந்நிகழ்வால் மாநிலத்தில் மற்ற தொகுதிகளில் பாஜகவின் வெற்றி குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வயநாடு மாவட்டத்தில் கல்பேட்டை தொகுதி மற்றும் மானந்தாவடி தொகுதியில் மட்டும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக அறிவித்துள்ள நிலையில் அதிலும் ஒரு வேட்பாளர் போட்டியிடப் போவதில்லை.  எனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஜெயலட்சுமியின் வெற்றி உறுதி ஆகி உள்ளதாகத் தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.