டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் காரணமாக, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மராட்டிய மாநில பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேசிய மருத்துவ கவுன்சிலில் முறையிட இருப்பதாகவும் மராட்டிய மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மே 5ந்தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வு முடிவுகள் ஜுன் 4ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. இந்த நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆலோசனையின்பேரில், சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீட் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது பற்றி விரிவான விசாரணை நடத்த ஆர்.ஜே.டி. கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது அனைத்தையும் ஒன்றாக்கும் சூழ்ச்சி என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தல். ஏற்கனவே தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை தொடர்ந்து மராட்டியம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. நீட் முறைகேடு புகார் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில் இன்று பிற்பகல் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.