டில்லி
எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூறியது போலவே பாஜகவின் கூட்டணிக் கட்சியும் பாஜக பதவி போதையில் உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அதன் கூட்டணிக் கட்சிகளே குறை கூறி வருகின்றன. லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் பாஜக அரசு ஏழைகள், சிறுபான்மையோர் மற்றும் தலித்துகள் முன்னேற்றத்தை அலட்சியம் செய்து வருவதாக ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வசிக்கும் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் பாஜக வை தாக்கிப் பேசி உள்ளார்.
உத்திரப் பிரதேச அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவர் ராஜ்பர். இவர் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஆவார். இவர், “உ பி யில் இரண்டு முக்கிய தொகுதிகளில் பாஜக தோற்றுள்ளது. ஆனால் முன்பு வாக்களித்த ஏழை மக்களை அரசு மறந்து விட்டதால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. கோவிலில் காட்டும் அக்கறையை மக்கள் முன்னேற்றத்தில் இந்த அரசு காட்டவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது நீதிமன்ற வழக்கில் உள்ள நிலையில் அரசு கோவில் கட்டப் போவதாக அறிவித்துள்ளது. நாங்களும் பாஜகவின் கூட்டணியில் உள்ளோம் ஆனால் பாராளுமன்றத்தில் 325 இடங்களைப் பெற்று பாஜக அரசு அமைத்துள்ளதால் தற்போது பதவி போதையில் பாஜக உள்ளது. அதனால் கூட்டணி தர்மத்தை அடியோடி மறந்து விட்டது.” என செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
ஒரு சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பாஜக பதவி போதையில் இருப்பதாக கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.