சென்னை:
காவல்துறையால் தேடப்பட்டு வந்த பிரபல சென்னை ரவுடி பினு இன்று அம்பத்தூர் காவல் துணை ஆய்வாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பினுவை சுட்டுப்பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பினு இன்று சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் ரவுடி பினு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அரிவாளால் கேட் வெட்டியும், ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாடங்களுடன் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதில் மார் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர். இருந்தாலும் ரவுடி பினு உள்பட 50க்கும் மேற்பட்டோர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய கைதிகளை சுட்டுப்பிடிக்க போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டு இருந்தார். மேலும் தேவைப்பட்டால் பினுவை சுட்டுப்பிடிக்கவும் திட்டமிட்டது.
இந்நிலையில், ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான சென்னை சூளைமேட்டை சேர்ந்த முகேஷ் என்பவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருத்போது முகேஷை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து ரவுடி பினுவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ரவுடி பினு சரண் அடைந்துள்ளார்.
ரவுடி பினு மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.