சென்னை:

சென்னை பூந்தமல்லி அருகே லாரி ஷெட் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சேர்ந்த பிரபல ரவுடி நேற்று சரணடைந்த நிலையில்,  லாரி ஷெட்டின் உரிமையாளர் இன்று திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் சென்னை சேர்ந்த பிரபல  ரவுடி பினு தனது பிறந்தநாளை விமரிசை யாக  கொண்டாடினார். அப்போது, அரிவாளால் கேட் வெட்டியும், ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டும் பிரமாண்டமாக விழா நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில்  70க்கும் மேற்பட்ட ரவுடிகள் பிடிபட்ட நிலையில், ரவுடி பினு உள்பட  50க்கும் மேற்பட்டோர் தப்பி விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தப்பி ஓடிய கைதிகளை சுட்டுப்பிடிக்க போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்ட நிலையில், நேற்று காலை ரவுடி பினு, அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் முன்பு சரணடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட ஷெட் கொடுத்து உதவிய வேலு என்பவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

ரவுடி பினு மீது  3 கொலை வழக்குகளும் ஏராளமான கொலை முயற்சி வழக்குகளும், வழிப்பறி வழக்குகளும் உள்ளது.

இந்த விவகாரத்தில், ஏற்கனவே ரவுடி பினுவின்  கூட்டாளிகள் கனகு (எ) கனகராஜ், விக்கி (எ) விக்னேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாக  இருக்கும் நிலையில் பினுவின் ஆதரவாளர்கள் பலர் அதிரடியாக வேட்டையாடப்பட்டனர்.  இதைத்தொடர்ந்தே தான் எப்படியும் கைது செய்யப்படுவோம் அல்லது சுட்டுக் கொல்லப்படுவோம் என்று பயந்த பினு, நேற்று சரணடைந்தார்.

அப்போது, ரவுடி,  தான் திருந்தி வாழ விரும்பியே 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததாகவும், தனது தம்பியே தனது பிறந்த நாளை கொண்டாட வற்புறுத்தியாக கூறி உள்ளார்.

மேலும், நான் நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது. சூளைமேட்டில் பிறந்து வளர்ந்தவன் நான். நிறைய சிறைவாசம் அனுபவித்தவன் என்றும்,  நான் கரூரில் தலைமறைவாக இருந்தது என் தம்பிக்கு மட்டுமே தெரியும். என்னை மன்னித்து விடுங்கள்  என்று பினு கூறியதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.