லண்டன்: பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாடு முழுவதும் பீதி அதிகரித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், பல ஐரோப்பிய நாடுகளை உண்டு-இல்லை என்ற வகையில் படாய்படுத்தி எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், இதுவரை உலகெங்கிலும் கிட்டத்தட்ட 4300 பேர் வரை உயிரிழந்துவிட்டனர்.
ஐரோப்பாவிலேயே, மோசமாக பாதிக்கப்பட்ட நம்பர் – 1 நாடு இத்தாலி என்றிருக்கையில், பிரிட்டனிலும் அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என பிரிட்டன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பிறகே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், விழாவில் பங்கேற்ற மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனால் நாடின் டோரிஸ் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அத்துறையின் அமைச்சருக்கே பாதிப்பு ஏற்பட்டது புதியவகை அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு உள்ளான உலகின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பரிதாபமான சிறப்பை இவர் பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.