அகர்தலா:

திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து,  திரிபுரா மாநில முதலமைச்சராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால்  தேர்வு செய்யப்பட்ட பிப்லாப் குமார் தேப் முதல்வராக பதவி ஏற்றார். துணை முதல்வராக மூத்த பாஜக நிர்வாகி ஜிஸ்னு தேப் பர்மா பதவி ஏற்றார்.

தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில், கவர்னர் ததகதா ராய், பிப்லாப் குமார் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில்   பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் உள்பட பாஜக  முக்கிய நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கா உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

திரிபுரா மாநில  சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 17ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை கடந்த 3ந்தேதி நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கம்யூனிஸ்டு ஆட்சி தோல்வி அடைந்தது. பாஜக – திரிபுரா பழங்குடியின மக்கள் கட்சி (ஐபிஎஃப்டி) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக  எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டார்.  துணை முதல்வராக ஜிஸ்னு தேப் பர்மனும்  தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிப்லாப் குமார் தேப், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும்,  மாநிலத்தில் உள்ள  கல்வி, சுகாதாரம், கிராமிய மற்றும் பழங்குடி வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறி உள்ளார்.