பில்கிஸ் பானோ வழக்கில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மௌனம் சாதித்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சாந்த குமார், கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க அனுமதித்ததற்காக குஜராத் அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.

“குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் வெட்கித் தலை குனிகிறேன். இது வரலாற்றில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வழக்குகளில் ஒன்றாகும். எந்த அரசாங்கமும் குற்றவாளிகளுக்கு இத்தகைய விடுதலையை எப்படி அனுமதிக்க முடியும்? குஜராத் அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் வழக்கில் தண்டனை பெற்றவர்களை தூக்கிலிட வேண்டும்,” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக-வின் மூத்த தலைவருமான சாந்த குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு குஜராத் வகுப்புக் கலவரத்தின் போது பில்கிஸ் பானு-வைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததற்காகவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கொன்றதற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது.

இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் குஜராத் அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில் இந்த விடுதலையானது “வெட்கக்கேடானது” என்று கூறிய சாந்த குமார், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இவர்கள் மீதான கொடூர குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேலையில் இவர்களுக்கு தூக்குதண்டனை வழங்காமல் விடுவித்தது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து “வெற்றுக் கூற்றுக்களை” கூறியதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், விடுதலையை அடுத்து இந்த 11 குற்றவாளிகளையும் ஆகஸ்ட் 17 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அலுவலகத்தில் மாலை அணிவித்து வரவேற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது.

இருந்தபோதும், இந்த விவகாரத்தில் பாஜக தலைமை மௌனம் காத்து வருவது அந்த கட்சியினரிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கியுள்ளது.

குற்றவாளிகளிலேயே இந்த 11 பேரும் ஒரு மாதிரியாக்கும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் இவர்களுக்கு நன்னடத்தை சர்டிபிகேட் கொடுத்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவர் இவர்களை தூக்கிலிடவேண்டும் என்று கூறியிருப்பது பாஜக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவிலும் பெண்கள் தனிமையில் செல்லும் நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறிய மகாத்மா பிறந்த மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததையே திரை போட்டு மறைக்கும் விதமாக நடந்திருக்கும் இந்த விடுதலை சம்பவத்தை அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் கண்டித்து வருகிறார்கள்.